"எண்ணமெல்லாம் என்னவளே"
முன்னுரை :-
காதல் என்பது, வாழும் காலத்தில் மட்டும் பூப்பதில்லை;
அது நினைவுகளாகி நம் மூச்சுக்காற்றில் கலந்து காலத்திற்கும் வாழக்கூடியது.
சில மனிதர்களின் வருகை மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்
அப்படிப்பட்ட ஒரு ஆழமான அன்பையும்
அந்த அன்பிற்கு விதி வைத்த சோதனையும் தான் இந்த கதை
பேசுகிறது.
"என் டைரி" யில் இருந்து அனுபவத்தையும்
வலியையும் தழுவிய இந்த
உண்மையான அன்பின் வலி
பேசும் இந்தச் சிறிய முயற்சி
உங்கள் இதயதைத் தொடும்
என்று நம்புகிறேன்.
தொடங்கிய பயணம்:-
"வாழ்க்கை நமக்குத் தரும் மிகப்பெரிய பரிசு அன்பு. ஆனால் அதே அன்பு சில நேரங்களில் தாங்க முடியாத வலியையும் பரிசளிக்கும்"
சில மனிதர்கள் நம் வாழ்க்கையில் மிகச் சாதாரணமாாக நுழைவார்கள் ஆனால் அவர்கள் விட்டுச் செல்லும் நினைவுகள் நம் வாழ்நாள் முழுமைக்கும் அழியாத வடுகளாக மாறிவிடும்
கடல் அலைகள் கரைக்கு வந்து செல்வதைப் போல; அவள் நினைவுகள் என் மனதைத் தொட்டுக் கொண்டே இருக்கும்.
"வாசு - விதியின் ஆட்டத்திற்கு முன்பாக"
10 ஆம் நம்பர் பேருந்தும்;
ரெட்டை ஜடை அவளும் (2006)
அப்போதுதான் மொபைல் போன்கள் மெல்ல மெல்ல பிரபலமாகிக் கொண்டிருந்த காலம். 2GB Memory Card-ல் 300 பாடல்களை சேமித்து வைப்பதே பெரிய சாதனையாக இருந்த நாட்கள்.
பாக்கெட்டில் 5 ரூபாய் இருந்தால் போதும், உலகத்தையே ஜெயித்து விடலாம் என்றம்படி சுற்றிய கல்லூரிப் பருவம் அது.
காலை 8.15 மணி, வழக்கம்போல பேருந்து நிறுத்தத்தில் ஐடி கார்டை கழுத்தில் மாட்டிக்கொண்டு 10ஆம் நம்பர் பேருந்திற்காக காத்திருந்தேன்.
பேருந்து தூரத்தில் வரும்போதே கண்டக்டரின் விசில் காதை கிழிக்கும். வண்டி எங்கள் சீருடை பார்த்ததும் எங்களுக்கு நேராக, அதாவது நாங்கள் வேண்டுமென்றே நிறுத்தத்தை விட்டு சற்று தொலைவில் நிற்பதை வழக்கமாக கொண்டிருப்போம், அது சரியாக எங்களுக்கு நேராக நின்றது. நான் வழக்கம்போல படிக்கட்டில்
இல்ல இல்லை நாங்க நல்ல பசங்க - உள்ளே ஏறிநின்றோம்.
சில ஸ்டாப் பிறகு
அடுத்த ஸ்டாப்பில் பஸ் நின்றது. கூட்டத்தை விலக்கிக் கொண்டு சில பள்ளி மாணவிகள் உள்ளே ஏறினார்கள்,
அப்போதுதான் அவளைப் பார்த்தேன்.
நீல நிறப்பாவாடை
வெள்ளைச் சட்டை, இரட்டை ஜடை
பின்னல் மல்லிகைப் பூ, வட்டமான முகம். ஒன்னு தெரியுமா
முதல் முதலில் அவளுக்காக நான் வைத்த பெயர் ஜாஸ்மின்.
என் டைரியில் இடம் பெற்ற அவள் முதல் பெயரும் இதுதான்.
பேருந்து மெல்ல புறப்பட்டது
ஜன்னல் தென்றல் வீசியது
அவள் முகத்தில் விழுந்த முடிகற்றைகளை ஒதுக்கியபடி சுற்றும் முற்றும் பார்த்தாள்.
திடீரென அவள் பார்வையும் என் பார்வையும் ஒருநொடி நேருக்கு நேர் சந்தித்தன.
அந்த நொடி... சுற்றி இருந்த சத்தங்கள் கண்டக்டர் விசில் அடித்தது, டீசல் என்ஜின் கர்ஜனை எதுவுமே என் காதில் விழவில்லை. எல்லாமே Slow Motion மாறுவதுப்போல இருந்தது. ஆனால் என் இதயம் மட்டும் வேகமாக துடிக்க தொடங்கியது.
அவள் என் கல்லூரியின் அருகே இருந்த அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்,
அதன் பிறகு, தினமும் காலை 8.30, 10A பேருந்து பயணம் எனக்கு வெறுமனே கல்லூரிக்குச் செல்லும் பயணமாக இருக்கவில்லை.
கடிகாரப் பார்வையும்,
பயத்தில் உறைந்த ஒரு நாளும்,
நாட்கள் சிறகைக் கட்டிப் பறந்தன. தினமும் காலை 10A பேருந்து பயணம் எங்கள் இருவருக்குமே பழக்கமாகியிருந்தது. பெரிய பேச்சுவார்த்தை எதுவும் இல்லை ஆனால் அந்த பார்வைகளும், மெல்லிய புன்னகைகளுமே எங்களுக்குள் ஒரு அழகான உறவை உருவாக்கியிருந்தன.
அன்று வழக்கம்போல பேருந்தில் நல்ல கூட்டம். அவள் எனக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தாள். மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு அது.
அவளிடம் ஏதாவது பேச வேண்டும் என்ற தவிப்பு இருந்தாலும் வார்த்தைகள் வெளியே வர மறுத்தன.
திடீரென "இப்போ மணி என்ன இருக்கும்" என்று ஒரு சிறு யோசனை.
சட்டென்று எந்த யோசனையும் இல்லாமல், கூட்ட நெரிசலில் அவள் கையைப் பிடித்து, அந்த சிறிய கடிகாரத்தில் மணி பார்த்தேன்.
மணி : 8:45
அந்த நொடிதான் நான் என்ன செய்தேன் என்பதே எனக்கு உறைத்தது.
ஐயோ... அவளது கையைத் தொட்டுவிட்டோமே.
பயத்தோடு அவளது முகத்தைப் பார்த்தேன், அவளது கண்கள் விரிந்திருந்தன.
அது கோபமா?
அதிர்ச்சியா?
அல்லது நாணமா?
என்று என்னால் சரியாகக் கணிக்க முடியவில்லை. அவள் உடனே தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டு, முகத்தை திரும்பிக் கொண்டாள். என் இதயத்துடிப்பு வழக்கத்தை விட பத்து மடங்கு வேகமாக ஓடத் தொடங்கியது.
'ஐயோ, தப்பா நினைச்சுப்பாளோ, இனிமே என்னைப் பார்க்கவே மாட்டாளோ?' என்ற பயம் என் மண்டையைப் பிளந்தது.
அன்று மாலை கல்லூரி முடிந்து வழக்கமான பேருந்திற்காக காத்திருந்தேன்,
காலை 10A போலவே மாலை 10C ஒரே பேருந்தில் தான் போவோம். ஆனால் அன்று நிமிடங்கள் ஓடின
பேருந்துகள் வந்து சென்றன
அவள் வரவில்லை.
ஒருவேளை என் மேல கோபப்பட்டு வேற பஸ்ல போயிட்டாளா?'
அன்று இரவு தூக்கமே வரவில்லை.
மறுநாள் காலை
வழக்கமான பேருந்து நிறுத்தத்தில் நின்றது.
அவள் ஏறினாள். ஆனால்...
அன்று அவள் என் பக்கமே பார்க்கவில்லை.
வழக்கமாக ஆட்கள் கூட்டத்திற்கு நடுவே என்னை தேடும் அவளது கண்கள், அன்று நேராக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. என்னை அறவே தவிர்த்தன.
அந்த நொடி, என் உலகம் தலைகீழாக மாறியது போல இருந்தது.
5 Star சாக்லேட் to 5 Star Rating Love
மறுநாள் காலை -
மனதுக்குள் ஏகப்பட்ட பயமும் தயக்கமும். 'என்ன ஆனாலும் பரவாயில்லை, இன்னைக்கு அவகிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும்'னு முடிவோடு பேருந்தில் ஏறினேன்.
கூட்டத்திற்கு நடுவே அவளுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு மெல்லிய குரலில் ஆழமான உணர்வோடு 'சாரி' என்றேன்.
அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது பார்வையில் இருந்த லேசான நெகிழ்ச்சி, என் பயத்தை பாதி குறைத்தது. அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை.
மாலை -
அவள் வழக்கமான பேருந்தில் ஏறினாள். பார்வையும், சிறு நெகிழ் புன்னகையும் புரிய வைத்தது, என் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று.
அதன் பிறகு சில மாதங்கள் ஓடின (கதை சுருக்கத்திற்காக)
ஒரு நாள் மாலை வழக்கம்போல பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது
அவள் தான் அமர்ந்திருந்தாள்
எனக்கு இருக்கை இல்லை.
என் பையை அவளிடம் கொடுத்திருந்தேன்.
வழக்கமாக அமர்ந்திருப்பவரிடம் புத்தகப் பையைக் கொடுப்பது வழக்கம்.
அதேபோல் அன்று அவள் தன் பையிலிருந்து ஒரு 5 Star சாக்லேட்டை எடுத்து என் பையில் திணித்தாள். உடனே என்னை பார்த்தாள். நான் அதை சுதாரித்து வேறு பக்கம் பார்ப்பது போல் நடித்தேன்.
சில நிமிடங்களில் மீண்டும் ஒரு சாக்லேட் வைத்தாள்.
எனக்கு ஒண்ணுமே புரியல!
அவள் நிறுத்தம் வந்ததும் இறங்கினாள். அவள் ஜன்னலில் கடக்கும் போது சாக்லேட் எடுத்து அவளிடம் காட்டினேன். அவள் எதுவும் சொல்லாமல், ஒரு குறும்புத்தனமான புன்னகையை மட்டும் சிந்திவிட்டு ஓடிவிட்டாள்.
மறுநாள் காலைதான் ரகசியம் உடைந்தது.
அவளுடைய தோழி மூலமாக தெரியவந்தது - நேற்று அவளுடைய பிறந்தநாள்.
வார்த்தைகள் சொல்ல முடியாத காதலை ஒரு 5 Star சாக்லேட் உறுதிப்படுத்தியது.
அந்த முதல் முத்தமும்,
காலம் செய்த கோலமும் !'
காதல் உறுதியான பிறகு, எங்கள் உலகம் காதலால் நிரம்பி வழியத் தொடங்கியது. பள்ளிப்படிப்பை முடித்து அவளும் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தாள்.
அன்று ஒரு நீண்ட தூர பேருந்து பயணம்.
ஜன்னலோர இருக்கையில் அவள். பேருந்தின் ஜன்னல்கள் தென்றலை வாரி வழங்கியது. வெளியே கடந்து செல்லும் மரங்களும் மின் விளக்குகளும் சாட்சியாக நின்று கொண்டிருந்தன.
நீண்ட நாட்களாக வைத்திருந்த தவிப்பு அந்த பயணத்தில் உறைந்து போன ஒரு தருணத்தில் நனவானது.
எதிர்பாராத அந்த நொடியில் அவளது கன்னத்தில் பதித்த அந்த 'முதல் முத்தம்'.
அந்த முத்தத்திற்குப் பிறகு அவள் நாணத்தில் சிவந்து, தன் தலையை என் இடது தோளில் மெதுவாகச் சாய்த்துக் கொண்டாள்.
அவளது வலது கை என் இடது கையை மிகவும் இறுக்கமாக பற்றிக் கொண்டது.
'என்னை விட்டு என்றைக்கும் போகாதே' என்று சொல்வது போலிருந்த அந்த பிடி, அந்த பயணம் திருமணம் வரை சென்றது.
ஆனால்... காலம் எவ்வளவு கொடூரமானது.
இன்று... அதே நீண்ட தூரப் பயணம்.
அதே ஜன்னலோர இருக்கை... ஆனால்,
இந்த முறை காற்றில் காதலின் வாசனை இல்லை...
மரணத்தின் அமைதி மட்டுமே.
இருபது வருடங்கள் ஓடி மறைந்து விட்டன.
எத்தனையோ சிரிப்புகள், சின்ன சின்ன சண்டைகள், பகிர்வுகள் எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் அழகாகக் கட்டமைத்த அந்த 20 ஆண்டுகள் 2006 - 2026 ஒரு நொடியில் வெறும் நினைவுகளாக மாறி நிற்பதை என் மனதால் நம்ப முடியவில்லை.
இப்போதும் அவள் என் இடது தோளில்தான் சாய்ந்திருக்கிறாள், ஆனால்...
அன்று நாணத்தால் சாய்ந்தவள், இன்று உயிரற்ற பிணமாகச் சாய்ந்திருக்கிறாள்.
அன்று என் கையைப் பிடித்த அவளது வலது கையை..
இன்று என் இடது கையால் நான் இறுக்கமாகப் பிடித்திருக்கிறேன்.
ஆனால் அந்தப் பிடியில் இருந்த வெதுவெதுப்பும் அன்பின் துடிப்பும் இன்று இல்லை. பனி போல உறைந்து போய் கிடக்கிறது.
20 வருடங்களுக்கு முன்பு அதே தோளில், அதே கையைப் பிடித்துக் கொண்டு தொடங்கிய அதே பயணம்...
இன்று இறுதிப் பயணமாக மாறும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
பயணத்தில் தொடங்கி, என் தோளில் சாய்ந்து பயணத்தில் முடிந்தது.
அவள் என் பக்கத்தில் தான் இருக்கிறாள், ஆனால் இனி எப்போதுமே என்னோடு இல்லை!
பத்து வருட காதலும்,
பத்து வருட திருமணமும்...
முற்றுப்புள்ளி பெற்ற நாள்.
காதலில் கழிந்த 10 ஆண்டுகள், திருமண வாழ்க்கையில் 10, மொத்தம் 20 வருடம் அவள் என் மூச்சோடு மூச்சாகக் கலந்திருக்கிறாள்.
2006-ல் 10A பேருந்தில் பள்ளிச் சீருடையில் நான் பார்த்த அதே நிலாதான், என் வீட்டை கோயிலாக மாற்றி, என் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் நிறைந்து நின்றாள்.
ஆரம்பத்தில் காதலைச் சொல்லத் தயங்கிய நாட்கள், வீட்டின் எதிர்ப்புகளைத் தாண்டி போராடி கைப்பிடித்த தருணங்கள்,
திருமண வாழ்க்கையில் கட்டியெழுப்பிய கனவுகள்...
20 வருடங்களுக்கு முன் காதலோடு தொடங்கிய அதே பயணம்...
இன்று அவளின் இறுதிப் பயணமாக, என் வாழ்க்கையின் கடைசி அத்தியாயமாக முற்றுப்புள்ளி பெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்போது இந்த வார்த்தைகள் வடிவமாய் கொண்டிருக்கின்ற நாள்
நீ பிரிந்த வியாழன்
அதே சட்டை – கண்ணீருடன் இந்த வார்த்தைகள் உயிர் பெறுகின்றன.
நம் கடையில், இருக்கும் பொருள்களும் நாம் சேர்ந்து கண்ட கனவுகளும் என்னை நோக்கி ஒரு கேள்விக் கேட்டு கொண்டு இருக்கின்றன.
அவள் எங்கே? என்று.
இது என் வாழ்க்கை முடிவு!!
" கதையில் முடிவு பார்க்கலாமா!
சற்று வேறு கோணத்தில் !"
காலத்தின் கணக்கு சில நேரங்களில் தலைகீழாக மாறிவிடும் என்பார்கள்.
நான் இறந்து விட்டால்??
( Climax 2 )
அது 2026 பைக் Accident நான் இறந்து விட்ட கணம் அது.
அந்த பேருந்து பயணத்தில் வாசு என் இடது தோளில் சாய்ந்திருந்த போதே, என் ஆயுளின் பாதியை அவளுக்குக் கொடுத்துவிட்டேனோ என்னவோ.. அவளைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டு, நான் முதலில் விடைபெற்றுக் கொண்டேன்.
என் மறைவு வாசுவின் உலகத்தையே அசைத்துப் பார்த்தது
நான் இல்லாத முதல் 10 நாட்கள்... ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட சரியாக குடிக்கவில்லை, உணவை உண்ண மறுத்து, அறையின் ஒரு மூலையில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தாள், அவளது கண்கள் அழுது அழுது வற்றிப்போயிருந்தன.
30 நாட்களுக்கு பிறகு:-
நாட்கள் ஓடினாலும் அந்த வீட்டில் படர்ந்திருந்த சோகம் குறையவில்லை.
அன்று வாசுவின் நெருங்கிய தோழி, அவளைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்தாள். வாசற்படியைக் கடந்து உள்ளே நுழைந்தவளுக்கு, அந்த வீட்டின் நிலைமையைப் பார்த்து உறைந்து போனது.
வீடு முழுவதும் ஒரு மயான அமைதி சூழ்ந்திருந்தது. வெளிச்சமே இல்லாத ஒரு இருண்ட குகையைப் போல இருந்தது அந்த அறை.
தோழி மெதுவாக வீட்டிற்கு வந்து வாசு என்று கூப்பிட்டபடி
சுற்றும் முற்றும் தேடினாள்.
வாசு எங்கே என்று கேட்டபடியே தன் பார்வையை மேலே உயர்த்தினாள்.
அங்கே...
சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருந்த ஜோடி புகைப்படம்
(இருவரும் இணைந்து இருக்கும் படம்).
2006 பேருந்தில் சந்தித்த அந்த புன்னகையோடு இருவரும் புகைப்படத்தில் மாலையோடு அமைதியாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தனர். புன்னகைக்கும் முன் ஒரு சிறிய அகல் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.
தோழியின் கண்கள் கலங்கின. மெதுவாக நிமிர்ந்து அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாள்.
இரண்டாவது கிளைமாக்ஸ் இல் ஒருவேளை நான் இறந்திருந்தால்
அவள் முப்பது நாள் கூட தாண்டி இருக்க மாட்டாள், அந்தக் கள்ளியை பற்றி எனக்கு தெரியும்.
இன்று என்னை கட்டிப்போட்டதும் அவளும்; அந்தக் காதலுமே!
சில காதல்கள் வாழும் போது புகழப்படும்...
ஆனால், சில காதல்கள் மட்டுமே மரணத்தையும் தாண்டி ஒன்றாக வாழும் —
Story:- MANIKUMAR
Image source:- AI
கருத்துகள்
கருத்துரையிடுக